அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68-வது கிராமி விருது வழங்கும் விழாவில், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு “சிறந்த ஆடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் பதிவு” பிரிவின் கீழ் உயரிய விருது வழங்கப்பட்டது. அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் மற்றும் பிரபலத் தொகுப்பாளர் ட்ரெவர் நோவா போன்ற முக்கியப் பிரமுகர்களைப் பின்னுக்குத் தள்ளி தலாய் லாமா இந்த விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
மேலும் 1989-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவருக்கு, தற்போது கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டதை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், தலாய் லாமா ஒரு தூய்மையான மதத் தலைவர் அல்ல என்றும்,
இந்நிலையில் அவர் மதத்தை முகமூடியாகப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஓர் அரசியல் அகதி என்றும் குற்றம் சாட்டினார். மேலும், இந்த விருதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிரான செயல்களை மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் சீனா வன்மையாக எதிர்க்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
