உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த தனது மகளின் உடலை அடக்கம் செய்யாமல், நான்கு மாதங்களாக வீட்டுக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த 72 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். உதய பானு விஸ்வாஸ் என்ற அந்த முதியவரின் மகள் பிரியங்கா (35), கடந்த 2025 டிசம்பர் மாதம் நீண்ட கால உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
ஆனால், அவரது உடல் அழுகி நாற்றம் வீசாமல் இருக்க, அந்த முதியவர் வீடு முழுவதும் வாசனை திரவியங்களைத் தெளித்து, குப்பைகள் நிறைந்த ஒரு அறைக்குள் உடலைப் பூட்டி வைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, நீண்ட நாட்களாகக் காணாமல் போன உதய பானுவை அவரது உறவினர்கள் ஒரு தேநீர் கடையில் பார்த்துக் கேட்டபோது, மகள் மருத்துவமனையில் இருப்பதாகப் பொய் கூறியுள்ளார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். போலீசார் வீட்டை உடைத்துப் பார்த்தபோது, பிரியங்காவின் உடல் எலும்புக்கூடான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக உதய பானு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த முதியவருக்கு மனநலப் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு மனநலப் பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் அவர் ஓரளவு சீரான மனநிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013-ல் பிரியங்காவின் தாய் இறந்த பிறகு, தந்தையும் மகளும் மற்றவர்களுடன் தொடர்பின்றித் தனித்தே வாழ்ந்து வந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
