உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தந்தை ஒருவரே தனது இரண்டு பிஞ்சு மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவருக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்துள்ளது.

ஆரம்பத்தில் இனிமையாக இருந்த இவர்களது வாழ்க்கையில், கணவனுக்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் மற்றும் மனைவியின் மீதான அதீத சந்தேகம் காரணமாகப் புயல் வீசியது. மனைவி யாரோடும் பேசிவிடக் கூடாது என்பதற்காக வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி ரஞ்சன் சித்ரவதை செய்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு, தனது இரண்டு மகள்களுக்கும் உணவில் தூக்க மாத்திரை கொடுத்து மயங்க வைத்துள்ளான் அந்த நயவஞ்சக தந்தை. நள்ளிரவில் சிறுமிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, கூர்மையான ஆயுதத்தால் அவர்களின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான்.

இந்த கொடூரத்தைச் செய்துவிட்டு அவனே போலீசுக்கு போன் செய்து சரணடைந்துள்ளான். “தான் இறந்த பிறகு மகள்கள் கஷ்டப்படக் கூடாது என்பதால் அவர்களைக் கொன்றுவிட்டதாக” அவன் வாக்குமூலம் அளித்தாலும், மனைவியின் மீதான சந்தேகமே இந்த கொலைக்கு முக்கியக் காரணம் எனத் தெரிகிறது.

“பெற்ற மகள்களையே கொன்ற அந்த அரக்கனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்” என அவரது மனைவி ரேஷ்மா கதறித் துடிப்பது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. போலீசார் தற்போது அந்த நபரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.