திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுமார் ரூ.2,095 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டதாகக் கடுமையாகச் சாடிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதற்குத் துணையாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தின் உரிமைகளுக்காகத் தான் குரல் கொடுப்பதைக் கண்டு வடமாநில இளைஞர்கள் கூட தற்போது பாராட்டி வருவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

​ஜிஎஸ்டி முறையினால் மாநிலங்களின் வரி உரிமையும் வருவாயும் பறிபோய்விட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் இ.பி.எஸ், ஏழை மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத்திட்டம் அழிக்கப்படுவதற்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களுக்குக் கட்சி கடந்து கிடைத்து வரும் பாராட்டுகள், தமிழக அரசு சரியான பாதையில் செல்வதைக் காட்டுவதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.