தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததை உறுதிப்படுத்திய நிலையில், கூட்டத்தில் பேசிய அவர், “பொங்கலுக்கு 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கினால் மக்கள் திமுகவின் ஊழல்களை மறந்துவிடுவார்கள் என்று ஆளும் கட்சி கணக்கு போடுகிறது.

ஆனால், எங்கள் பலமான கூட்டணி அமைந்த உடனே திமுக தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது” என்று சாடினார். மேலும், தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் திமுக ஆட்சியில் கேள்விக்குறியாகியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், பெற்றோர்களின் நலன் கருதி மீண்டும் திமுக ஆட்சிக்கு வராதபடி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். மேலும் விவசாயிகளின் காலை தொட்டு கேட்கிறேன் தயவு செய்து திமுகவுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள்’ என்றார்.