‘ஜனநாயகன்’ திரைப்பட தணிக்கை விவகாரத்தில் பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தேவையற்ற முறையில் திமுகவும் காங்கிரசும் இதனை அரசியலாக்குவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கலையையும் அரசியலையும் கலக்கக்கூடாது எனப் பேசும் காங்கிரசார் ஆட்சிக் காலத்தில்தான் அதிக திரைப்படங்கள் தடை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், திரைத்துறையினரை ஒடுக்கி அரசியல் செய்யக்கூடாது எனக் கூறும் திமுகவினர், தியேட்டர்களைக் கூட முறையாக ஒதுக்குவதில்லை என விமர்சித்த தமிழிசை, சென்சார் சான்றிதழ் என்பது விதிகளுக்கு உட்பட்டது என்றும், இதில் மத்திய அரசை இழுப்பது உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்தார்.
