கடலூரில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த் துணை முதல்வராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று பிரேமலதா அவர்கள் துணை முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்களிடையே பேசினார்.
மேலும், வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய சுதீஷ், “தேமுதிக என்பது வெறும் 10 அல்லது 15 தொகுதிகளுக்காகக் காத்திருக்கும் கட்சி அல்ல” என்று அதிரடியாகத் தெரிவித்தார். தொகுதிகளின் எண்ணிக்கையை விட கட்சியின் கௌரவமும், அதிகாரத்தில் பங்கெடுப்பதும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது. தேமுதிகவின் இந்தத் திடீர் அறிவிப்பு மற்றும் துணை முதல்வர் கோரிக்கை, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
