ஐபிஎல் 2026 தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கும் அந்த அணியின் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருந்த ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு அனுப்பிவிட்டு, சஞ்சு சாம்சனை சென்னை அணிக்குக் கொண்டு வந்ததில் தோனிக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சன் அணிக்கு வருவதை தோனி ஆதரித்தாலும், ஜடேஜாவை அணியை விட்டு வெளியேற்ற அவர் விரும்பவில்லை என்றும், தனது பேச்சையும் மீறி நிர்வாகம் இந்த முடிவை எடுத்ததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதுமட்டுமின்றி, பேட்டிங் வரிசையில் தோனி முன்வரிசையில் களமிறங்க வேண்டும் என நிர்வாகம் வற்புறுத்தியதாகவும், அதற்கு தோனி மறுப்பு தெரிவித்து கடைசி ஓவர்களில் மட்டுமே விளையாடுவேன் என உறுதிபடக் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

இந்த மோதலால் மனமுடைந்த தோனி, எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடப் போவதில்லை என்று கூறிய நிலையில், சிஎஸ்கே அதிகாரிகள் அவரை சமாதானம் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

44 வயதான தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என்று கருதப்படுவதால், இந்தச் சர்ச்சைகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.