பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மோசின் நக்வியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஒரு நேரடித் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அக்மல், “உங்களால் களத்தில் விளையாடி ஜெயிக்க முடியாது; பிறகு என்ன ஐசிசி கோப்பையைத் திருடிக்கொண்டு வரப்போகிறீர்களா?” என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2025 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றபோது, இந்திய கேப்டன் கோப்பையை வாங்க மறுத்ததால் மோசின் நக்வி அதைத் தூக்கிக்கொண்டு ஓடியதாகச் சமூக வலைதளங்களில் ‘டிராபி திருடன்’ என அவர் கிண்டல் செய்யப்பட்டு வருகிறார்.
அதைக் குறிப்பிட்டே அக்மல் இப்போது விமர்சனம் செய்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி, தற்போது வங்கதேசத்திடமும் தோற்றுள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பிசிபி நிர்வாகத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
