ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் தூணாகத் திகழும் நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் விளையாடிய ஆர்சிபி அணிகளில் இடம் பெற்ற வீரர்களை வைத்து ஒரு ‘ஆல்-டைம் பெஸ்ட்’ அணியைத் தேர்வு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில், வரும் தொடரிலும் அதே ஆதிக்கத்தைத் தக்கவைக்க அந்த அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது.
பல்வேறு காலகட்டங்களில் ஆர்சிபி அணியில் இடம்பிடித்த அதிரடி ஆட்டக்காரர்கள் மற்றும் மேட்ச் வின்னர்களைக் கொண்டு கோலி இந்த அணியை உருவாக்கியுள்ளார். அதன்படி அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி ஆகியோரைத் தொடக்க ஆட்டக்காரர்களாக அவர் தேர்வு செய்துள்ளார். மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திரம் ஏபி டி வில்லியர்ஸும், நான்காவது இடத்தில் கே.எல். ராகுலும் இடம் பெற்றுள்ளனர். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் ரஜத் பட்டிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சுப் பிரிவில் ஹர்ஷல் பட்டேல், சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே, வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோருடன், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும் அணியில் இடம் பிடித்துள்ளனர். மொத்தமாக கிறிஸ் கெயில், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கே.எல். ராகுல், ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், அனில் கும்ப்ளே, மிட்செல் ஸ்டார்க், டேல் ஸ்டெய்ன், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த சீசனில் ஆர்சிபி அணி முதன்முறையாகக் கோப்பையை முத்தமிட்டதில் விராட் கோலியின் பங்கு அளப்பரியது. அதே உற்சாகத்துடன் வரும் தொடரிலும் களமிறங்க அவர் தயாராகி வருகிறார். மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த முறை ஆர்சிபி அணி தங்களின் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க முனைப்புடன் உள்ளது.
