வரும் மார்ச் 28-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ள 2026 ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில், நடப்பு சாம்பியனான ஆர்சிபி (RCB) அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இத்தொடர் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ள கணிப்புகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகாஷ் சோப்ராவின் கணிப்பின்படி, இந்த ஆண்டு பிளேஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெறும் நான்கு அணிகள்: மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ்
இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ஆகிய முன்னணி அணிகள் இடம்பெறாதது, அந்த அணி ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.
இந்த ஆண்டு கோப்பையை எந்த அணி வெல்லும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா, “யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ அவர்களே கோப்பையை வெல்வார்கள். ஆனால், இந்த முறை ஐபிஎல் தொடருக்கு ஒரு புதிய சாம்பியன் கிடைக்க வாய்ப்புள்ளது. அது டெல்லி கேபிடல்ஸ் அணியாக இருக்கக்கூடும்” என்று தனது கணிப்பை முன்வைத்துள்ளார்.
ஐபிஎல் திருவிழா பெங்களூருவில் தொடங்குவதால், நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி தனது சொந்த மண்ணில் வெற்றியைத் தொடங்கித் தனது கோப்பையைத் தக்கவைக்கத் தீவிரமாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷ் சோப்ராவின் இந்தக் கணிப்பு, போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
