சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (எ) பிஸ்கட் சந்தோஷ் (23). சரித்திரப் பதிவேடு ரவுடியான இவர் மீது 8-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தோஷ், ஜாமீனில் வெளியே வந்தார்.
தனது நண்பர் கிஷோருடன் இருசக்கர வாகனத்தில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்தார். தகவல் அறிந்து வந்த எம்.கே.பி நகர் போலீஸார், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது தொடர்பாக போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த 2024-ஆம் ஆண்டு கொருக்குப்பேட்டையில் ‘ஸ்வீட்’ தினேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடந்தது தெரியவந்தது. தினேஷின் கொலைக்கு முக்கியக் காரணமான சந்தோஷ் சிறையிலிருந்து வருவதை நோட்டமிட்ட அவரது நண்பர்கள், திட்டமிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ் (21), ‘விரல்’ ஜீவா (21), தினேஷ் (22) மற்றும் அருள் சுரேந்தர் (19) ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடி வரும் நிலையில், பிடிபட்டவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
