மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், பாராமதிக்கு விமானத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நேற்று உயிரிழந்தார். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானி அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது, விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் அஜித் பவார், விமானி மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “டிசம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026-க்குள் இந்தியாவில் ஒரு பிரபலமான முதல்வர் அல்லது மத்திய அமைச்சர் உயிரிழப்பார்” என்று அவர் கணித்திருந்தார்.
ஏற்கனவே பீகார் அரசியல் மாற்றம் மற்றும் டெல்லி குண்டுவெடிப்பு குறித்து இவர் கூறியது சரியாக இருந்த நிலையில், தற்போது அஜித் பவாரின் மரணத்தையும் தனது கணிப்புடன் ஒப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், சமூக வலைதளங்களில் இந்த ஜோதிட கணிப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் எழுந்துள்ளன. “ஆண்டுதோறும் வயது முதிர்வு அல்லது விபத்துகளால் அரசியல்வாதிகள் இறப்பது இயல்பானது, இதைச் சாதாரண யூகம் என்றுதான் சொல்ல வேண்டும்” எனச் சிலர் விமர்சித்துள்ளனர்.
மேலும், அஜித் பவார் முதல்வர் அல்லது மத்திய அமைச்சர் இல்லை என்பதால் ஜோதிடரின் கணிப்பு துல்லியமானது இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
