மும்பை அருகே மீரா-பயந்தர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஒன்று, அதன் வினோதமான வடிவமைப்பால் தற்போது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. நான்கு வழிப்பாதையாகத் தொடங்கி திடீரென இரண்டு வழிப்பாதையாகச் சுருங்கும் இந்த மேம்பாலத்தின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது என்ன மாதிரியான இன்ஜினியரிங்?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மும்பை மாநகரப் பகுதி வளர்ச்சி ஆணையம் (MMRDA) தற்போது இதற்கு விளக்கமளித்துள்ளது.

அந்த அமைப்பின் கூற்றுப்படி, இது வடிவமைப்புக் குறைபாடு அல்ல; எதிர்காலத் திட்டத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவு. இந்த மேம்பாலம் பயந்தர் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கிழக்குப்பகுதிக்கான இரண்டு வழிப்பாதைகள் மட்டுமே தயாராக உள்ளன. மேற்குப்பகுதிக்கான மீதமுள்ள இரண்டு வழிப்பாதைகள் ரயில்வே தண்டவாளங்களுக்கு மேலே கட்டப்பட வேண்டியிருப்பதால், அந்தப் பணி அடுத்த கட்டத்தில் நடைபெறும். அதற்காகவே இப்போதே நான்கு வழிப்பாதைக்கான அகலத்துடன் பாலம் தொடங்கப்பட்டுள்ளது.

நிலப் பற்றாக்குறை மற்றும் மெட்ரோ பணிகளால்தான் இந்தத் தற்காலிகச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புக்காக அங்கு வேகத்தடைகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வேகமாகக் வரும் வாகனங்கள் திடீரென குறுகிய பாதையில் நுழையும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.