தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், காதலுக்குப் பெற்றோர் முட்டுக்கட்டை போட்டதால், ஒரு செவிலியரே தன் பெற்றோரைக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 23 வயதான அந்தப் பெண், சமூக வலைத்தளம் மூலம் பழகிய மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களது திருமணத்திற்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களைத் தீர்த்துக்கட்ட அந்தப் பெண் முடிவு செய்துள்ளார். தான் பணிபுரியும் மருத்துவமனையிலிருந்து மயக்க ஊசிகளைத் திருடி வந்த அவர், உடல் வலிக்கு மருந்து போடுவதாகக் கூறி தன் பெற்றோருக்கு அதிகப்படியான டோஸ் செலுத்தி அவர்களைக் கொன்றுள்ளார்.

பெற்றோர் இறந்த பிறகு, விவசாயக் கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தனது சகோதரரிடம் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், இதில் சந்தேகமடைந்த அவரது சகோதரர் காவல்துறையில் புகார் அளித்தார்.

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், காதலனுடன் சேருவதற்காக அந்தப் பெண் தன் பெற்றோரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்தது அம்பலமானது. தற்போது அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ள போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.