ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கரும்பிள்ளை மடம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரும், ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய உறுப்பினருமான சத்தியநாராயண ராவ், செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தமிழக அரசியலைக் குறித்தும், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி நடிகர் விஜய் தனது “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை தொடங்கி, தமிழக அரசியலில் முதன்மை இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் குறித்து சத்தியநாராயண ராவ் கூறும்போது, “தமிழக அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்” எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த கருத்து, விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை சந்தேகத்திற்குள்ளாக்கும் வகையில் இருக்கிறது.

அதேசமயம், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பேசும்போது, “அண்ணாமலை புத்திசாலி… அவர் நன்றாக வருவார்” என்று பெருமிதத்துடன் பாராட்டினார். மேலும், “வரும் காலங்களில் அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய உயரத்தை எட்டுவார்” என்றும், அவரது வளர்ச்சிக்கு தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் தொடர்பாகவும், “அவர் கவர்னராக நியமிக்கப்பட வேண்டிய வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் அதை வேண்டாம் என்று கூறிவிட்டார். எம்பியாக இருப்பது போன்ற பதவிகள் அவருக்குத் தேவையில்லை” எனவும் கூறியிருக்கிறார். இதனால், ரஜினி அரசியலுக்குள் மீண்டும் வருவார் என்ற எதிர்பார்ப்புகள் குறைந்து வருவதை இந்தக் கருத்து உறுதிப்படுத்துகிறது.