தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு தரப்பினர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) கூட்டணி சேர விரும்புவது உண்மைதான்” என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

திமுகவை மதிப்பதாக ஒருபுறம் கூறினாலும், “அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதே எங்கள் விருப்பம், காங்கிரஸுக்கு எனப் பல தேவைகள் உள்ளன” என்று அவர் குறிப்பிட்டிருப்பது, வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கைக் கேட்கப் போகிறது என்பதையும், இல்லையென்றால் மாற்றுப் பாதையைத் தேடும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

​காங்கிரஸ் மற்றும் தவெக இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக ஏற்கனவே செய்திகள் உலா வந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர் ஒருவரே இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய், தனது முதல் மாநாட்டிலேயே ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்தது காங்கிரஸில் உள்ள ஒரு தரப்பினரை ஈர்த்துள்ளதாகத் தெரிகிறது.

இதுவரை கூட்டணி குறித்து மௌனம் காத்து வந்த காங்கிரஸ் தலைமையைக் காட்டிலும், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் தவெக பக்கம் செல்ல ஆர்வம் காட்டுவது திமுக தலைமைக்கு ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகக் கூட்டணி அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.