2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தமிழக வெற்றி கழக (தவெக) நிர்வாகிகளுக்கான விருப்பமனு விநியோகம், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 6) உற்சாகமாகத் தொடங்கியது. கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் இந்த நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பனையூர் அலுவலகத்தில் வேட்பாளர் விண்ணப்பத்தைப் பெறத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் காலையிலேயே திரண்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் கொள்கை முடிவெடுக்கும் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவித்தார்.
அவர் கூறுகையில், “பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும் என்றும், தனித் தொகுதிகளில் (SC/ST) போட்டியிட விரும்புவோருக்கு ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார். மற்ற பிரதான கட்சிகளுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைந்த கட்டணமாகப் பார்க்கப்படுவதால், சாதாரணத் தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 14 வரை இந்த விண்ணப்பங்கள் விநியோகம் மற்றும் சேகரிப்பு நடைபெறும் என்பதால், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
