த.வெ.க. தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு ‘பாடை தயாராகிவிடும்’ என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். த.வெ.க.வின் வருகையால் நாம் தமிழர் கட்சியின் வாக்குச் சதவீதம் ஏற்கனவே குறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அக்கட்சி 8 சதவீதமாக இருந்தது தற்போது 1 சதவீதமாகச் சுருங்கிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
சாட்டை துரைமுருகன், “விஜய் எந்தத் தொகுதியில் நின்றாலும் அதே தொகுதியில் நானும் போட்டியிடுவேன்” என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய நாஞ்சில் சம்பத், “ஜெயிக்காது என்று தெரிந்து தேர்தலில் நிற்கும் கூமுட்டைகளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?” என்று கிண்டல் செய்துள்ளார். நாஞ்சில் சம்பத் இனிமேல் பேச ஆரம்பித்தால் ‘அக்னி மணக்கும், அணல் காற்று வீசும்’ என்ற பயத்திலேயே நாம் தமிழர் கட்சியினர் இப்போதே விமர்சிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
தன்னைப் பற்றி விமர்சித்த சாட்டை துரைமுருகனுக்குப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், தான் த.வெ.க.வில் இணைந்ததால் தனக்கு ‘கேம்பெயின் செக்ரட்டரி’ என்ற பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகப் பெருமிதம் கொண்டார். மேலும், தாம் இனிமேல் தான் உரக்கப் பேசப்போவதாகவும், கட்சி தொடங்கிய நாள் முதல் சீமானை ‘கங்காணி’, ‘காட்டிக் கொடுப்பவன்’, ‘சனாதனக் கும்பலுக்கான கைக்கூலி’ என்று விமர்சிப்பவர் தாம் தான் என்றும் கூறியுள்ளார்.
Damn. What a blow. 💥@NanjilPSampath sir dismantling NTK clean and brutal. 🤣😂😜pic.twitter.com/4RIwHIuldf
— RDP (@R4t10n4l_7) December 13, 2025
அதேபோல், சாட்டை துரைமுருகன் த.வெ.க. தொண்டர்களை ‘தற்குறிகள்’, ‘அறிவு இல்லாதவர்கள்’ என விமர்சித்ததற்கு, “த.வெ.க. தொண்டர்கள் பத்தரை மாற்றுத் தங்கங்கள்; தலைவனுக்காக உயிர் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள்” என்று புகழாரம் சூட்டினார். மேலும், “ஓடுகிற பாம்பை மிதித்து, மின்னலை விழுங்கி மின்சாரத்தைக் கொப்பளிக்கும் வல்லமை உள்ளவர்கள்” அவர்கள் எனக் குறிப்பிட்டதோடு, “உன் கட்சியில் இருப்பவர்களைக் காட்டிலும் த.வெ.க. தொண்டர்கள் தரமானவர்கள்” என்றும் கூறி, “முதலில் உன் வீட்டுக்குள் சீமான் நுழையாமல் பார்த்துக்கொள்” என்று காட்டமாகக் கூறிப் பேட்டியை முடித்தார்.
