அ.தி.மு.க. ஐடி விங், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளம்பர மோகத்தில் இருப்பதாகச் சொல்லி அவரைச் கடுமையாக விமர்சித்துள்ளது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி நூறு நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், அவர்களின் அழுகுரலும், “எங்களை வந்து பாருங்கள்” என்ற கூக்குரலும் முதல்வரின் காதில் விழவில்லை என எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது.

அதேசமயம், பல லட்சம் செலவில் தன்னைத்தானே புகழ்ந்து பேசும் மேடைகள் அமைக்கப்பட்டால், அங்கே முதல்வர் உடனடியாக ஓடிச் செல்கிறார். நூறு நாட்களாகப் போராடும் மக்களைப் பார்க்க மட்டும் அவருக்குத் தோன்றவில்லை என்றும் அ.தி.மு.க கேள்வி எழுப்பியுள்ளது. ​இந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான் என்றும், அவர்கள் தான் தங்கள் எதிர்காலம் தெரியாமல் கதறித் துடிக்கிறார்கள் என்றும் அ.தி.மு.க. சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அங்கே காவலர்களால் குண்டுகட்டாகத் தூக்கிச் செல்லப்படுவதும் அந்தப் பெண்கள்தான். “இந்தப் பெண்மணிகள் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடாதா?” என்று முதல்வர் குறித்து ஆவேசமாகக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மக்கள் வேதனையில் அழுது கொண்டிருக்கும் போது, விழா மேடையில் அமர்ந்து முதல்வர் சிரித்துக் கொண்டிருக்க எப்படி மனம் வந்தது என்றும் அ.தி.மு.க. ஐடி விங் தனது பதிவில் விமர்சனம் செய்துள்ளது.