திமுகவை வீழ்த்தவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் நிலைநாட்டவுமே தாங்கள் ஒன்றிணைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவைத் தனது ‘ரோல் மாடல்’ என்று கூறிக்கொள்கிறார். ஆனால், அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிப்பது முரணாக உள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் தான் செங்கோட்டையன். விஜய் எங்களுக்கு எதிரி அல்ல; எங்களது ஒரே எதிரி திமுக தான். எனவே, திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்.

திமுக எம்பி கனிமொழி டெல்லி சென்று வந்தால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். ஆனால் நானோ, ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் டெல்லி சென்றால் மட்டும் ‘அழுத்தம்’ என்றும், டெல்லி தான் உங்கள் தலைமையா என்றும் கேட்கிறீர்கள். இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்.?

கடந்த காலங்களில் நாங்கள் பிரிந்து நின்றதால் தோல்வியைத் தழுவினோம். அந்தத் தவறை உணர்ந்தே இப்போது மீண்டும் இணைந்துள்ளோம். ஓபிஎஸ் எப்போதும் என்னுடைய அண்ணன் தான். இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி மட்டுமல்ல; ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் உருவான இணைப்பு. எங்களுக்குள் என்ன குழப்பத்தை விளைவிக்க நினைத்தாலும் அது நடக்காது.

கே.ஏ.செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் மாற்று முகாமிற்குச் சென்றது வருத்தமளிக்கிறது. இருப்பினும், தனிநபர்கள் செல்வதால் ஒரு இயக்கத்தைப் பாதிக்க முடியாது. கருத்து வேறுபாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் நலனுக்காகவும் ஜெயலலிதாவின் லட்சியத்திற்காகவும் நாங்கள் கைகோர்த்துள்ளோம் என்று கூறினார்.