தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் விஜய்யின் சம்பளம் குறித்து எழுப்பியுள்ள கேள்வி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
மேலும் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ஊழலைப் பற்றிப் பேச விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். “விஜய் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தில் ‘ஒயிட்டில்’ எவ்வளவு வாங்குகிறார், ‘கருப்பில்’ எவ்வளவு வாங்குகிறார் என்பதை அவரே விளக்க வேண்டும்” என்று திண்டுக்கல் சீனிவாசன் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விஜய், தனது வருமானம் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறாரா என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதே அதிமுகவின் வாதமாக உள்ளது. குறிப்பாக, சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக விஜய் இருக்கும் நிலையில், அரசியல் களத்தில் அவர் வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலடியாக இந்தச் சம்பள விவகாரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே விஜய்யின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஊழல் மற்றும் கறுப்புப் பணம் குறித்துப் பேசும் முன் விஜய் தனது சொந்த கணக்குகளைச் சரியாக வைத்திருக்க வேண்டும் எனச் சாடியுள்ளார்.
