நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகப் புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் அரசியல் வியூகம், தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் மற்றும் 100 இடங்கள், கேரளாவில் 10 இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி, புதுச்சேரியில் 5-10 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடுவதாக உள்ளது. இதற்காகக் காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தியுடனும் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முன்னிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சமீபத்தில் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் மிகக் குறைவாக இருந்ததே இந்தத் திட்டத்தில் பின்னடைவு ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்பாட்டாளர்கள் 5,000 பேருக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில், கூட்டம் ஆரம்பித்த பின்னரும் பல இருக்கைகள் காலியாகவே இருந்தன. இதன் காரணமாக, விஜய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாகப் பேச வேண்டிய சங்கடமான சூழல் ஏற்பட்டது.

இதனால், தவெக-வின் அடிப்படை பலம் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தவெக-வுக்கு நினைத்த அளவிற்கு செல்வாக்கு இல்லை என்று கருதி, ரங்கசாமி தனது கூட்டணித் திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளாராம். ஆரம்பத்தில் காட்டிய ஆர்வம் குறைந்துவிட்டதாகவும், இதனால் ரங்கசாமி பாஜக கூட்டணியிலேயே தொடர வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.