கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரம்மாண்ட பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடிகர் விஜய் ஏற்கனவே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதற்குப் பதிலளித்துள்ள விஜய் தரப்பு, நேரில் ஆஜராக 15 நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில் வருகிற 15ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, இதே விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவருக்கு மின்னஞ்சல் வாயிலாக சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது பதிவில், “கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து ஊடகங்களில் முரணான செய்திகள் வருகின்றன. சிபிஐ அதிகாரிகள் வரும் மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில், குறித்த தேதியில் சிபிஐ அலுவலகத்திற்குச் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவத்தில் ஆளும் தரப்பு மற்றும் புதிய அரசியல் கட்சித் தலைவர் என இரு தரப்பினருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.