கூட்டணியில் இருந்தால் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், 1999 முதல் 2003 வரை திமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தபோது அந்த கட்சியை விழுங்கிவிட்டதா?” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களுக்குப் பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார். இதற்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, சாமானியர்கள் பொது வாழ்க்கைக்கு வருவதைத் தடுப்பதற்காகவே ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களை வைத்து திமுக அவதூறுகளைப் பரப்புகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாஜகவைத் தொடர்புபடுத்திப் பேசியதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன். அதேபோல், என் மீது வீணான புகார்களைக் கூறிய டி.ஆர்.பாலு மீதும் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
பாஜக அதிமுகவை விழுங்கி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் போலி கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. மாறாக, திமுகவை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டதால் அவர் தனது கட்சிக்காகக் கண்ணீர் வடிக்கலாம். நிதிஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே போன்றவர்கள் குறைந்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்களை வைத்திருந்தாலும் அவர்களை முதலமைச்சராக்கியது பாஜகதான். நாங்கள் எந்தக் கட்சியையும் விழுங்குவதில்லை.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) பாஜக அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. டீயும் காபியும் ஒன்றாகக் கலக்காது; அதுபோல் எங்கள் சித்தாந்தங்கள் வேறு. ஊடகங்கள் ஊகத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட வேண்டாம். ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கப்பட்டது குறித்துத் தவறான முடிச்சுகளைப் போடத் தேவையில்லை, அவருக்குத் தேர்தலில் வேறு பொறுப்புகள் வழங்கப்படும்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது. மத்திய அரசு போதிய அளவு பெட்ரோலியப் பொருட்களை இருப்பு வைத்துள்ளது. எனவே, பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை,” என அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் நாளை பிரதமர் மோடியின் திருச்சி வருகை தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
