தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகள் வெளியாகப்போகும் பதற்றமான சூழலில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் “குண்டு” போடுவது போல ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இப்போது அனலைக் கிளப்பியுள்ளது. “தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் தவெக 40 முதல் 45 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும்” என்றும், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் விஜய் கட்சி 25 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அள்ளும் என்றும் அவர் ஜோசியம் கணித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், “காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கூட்டணி வைத்திருந்தால் அது வெற்றி கூட்டணியாக இருந்திருக்கும், ஒரு நல்ல வாய்ப்பை காங்கிரஸ் தவறவிட்டுவிட்டது” என அவர் வருத்தப்பட்டிருப்பது திமுக தரப்பை செம டென்ஷனாக்கியுள்ளது.

குறிப்பாக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் வெற்றி பெறுவது உறுதி என அடித்துச் சொல்லியுள்ள பெருமாள்சாமி, வரும் லோக்சபா தேர்தலில் விஜய்யுடன் காங்கிரஸ் கைகோர்த்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரிய வெற்றியைப் பெறலாம் என யோசனை கூறியுள்ளார்.

“காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே மாற்றுக்கட்சிக்காக வேலை செய்பவர்கள் கட்சியை கறையான் போல அரிக்கிறார்கள்” என உள்விவகாரங்களையும் அவர் சாடியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. ராகுல் காந்தியும் ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம் செய்யாத நிலையில், தேர்தல் முடிந்த கையோடு மாவட்டத் தலைவர்களே இப்படி தவெக-விற்கு ஆதரவாகப் பேசுவது, திமுக-காங்கிரஸ் கூட்டணி இனி நீடிக்காது என்பதற்கான அறிகுறியாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.