தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகளை நுழையச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், எந்த காலகட்டத்திலும் அத்தகைய சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற முடியாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை வீழ்த்த = முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். “திமுக மட்டுமன்றி, கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது. பாஜக எதிர்க்கட்சிகளை நசுக்க முயல்கிறது. தமிழக ஆளுநராக இருக்க ஆர்.என். ரவி எந்த வகையிலும் தகுதியற்றவர்” என்றார்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்டது அதிகார வரம்பை மீறியதாக வைகோ குற்றம்சாட்டினார். “நீதிபதிகளை நான் மதிக்கிறேன். ஆனால்  நீதிபதிகள் வரம்புக்குள் பேச வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிரான வகையில் அச்சுறுத்தும் பாணியில் கருத்து கூறுவது ஏற்க முடியாதது” என அவர் விமர்சித்தார்.

எஸ்ஐஆர் நடவடிக்கையை பயன்படுத்தி தமிழகத்தில் 75 லட்சம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டு வருவதையும், 65 லட்சம் வெளிமாநில வாக்காளர்களை புதிதாக சேர்க்க திட்டமிடப்படுவதை வைகோ தீவிரமாக கண்டித்தார். “இது முழுமையான மோசடி திட்டம். தமிழகத்தின் ஜனநாயக அமைப்பை மாற்றும் ஆபத்தான முயற்சி” என்றார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா திமுகவை “உடைத்து துடைத்து எறிவோம்” என பேசியதை வைகோ கடுமையாகக் கண்டித்தார். “அமித் ஷாவை விட நூறு மடங்கு சக்தி கொண்டவர்களை திமுக எதிர்கொண்டுள்ளது. விமர்சிக்கும் போது அவர் கவனத்துடன் பேச வேண்டும்; நாவை அடக்கிக் கொள்ள வேண்டும்” என்று வைகோ தெரிவித்தார்.

“விஜய் சினிமாவில் எழுதி கொடுக்கப்படும் வசனங்களைப் போலவே அரசியலிலும் பேசுகிறார். எம்ஜிஆர் திமுக அமைப்பில் வளர்ந்தவர்; மக்கள் வள்ளல். அவர் போல ஆயிரத்தில் ஒன்றாகவும் விஜய் இல்லை. அரசியலில் அவர் நினைக்கும் நிலைக்கு ஒருபோதும் வர முடியாது. அவரின் கனவு காகிதக் கப்பலில் கடல் கடக்க முயல்வதுபோல்; மணக்கோட்டை கட்டுவது போல” என்று வைகோ கிண்டலிட்டார்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் திட்டமிட்ட இந்துத்துவாவாதிகளின் முயற்சி என வைகோ குற்றம்சாட்டினார்.
“நூறு ஆண்டுகளாக அந்தத் தூணில் தீபம் ஏற்றிய வரலாறு இல்லை. உச்சிப் பிள்ளையார் கோவிலிலேயே தீபம் ஏற்றுவார்கள். இதனை மாற்றி மத உணர்ச்சி தூண்டும் முயற்சி இது” என்றார்.

வந்தே மாதரம் – நாடாளுமன்ற விவாதம்

வந்தே மாதரம் பாடல் குறித்த தற்போதைய விவாதத்தைப் பற்றி பேசும் போது,
“பாடலின் கடைசி இரண்டு வரிகள் இந்து தேவிகளைப் புகழும் வகையில் உள்ளன என்பதால் நேரு, நேதாஜி ஆகியோர் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அதை திணிக்க முயல்கிறது பாஜக” என்று கூறினார்.

தமிழகம் – மதச்சார்பற்றத்தின் அடையாளம்

இந்துத்துவா கொள்கைகளை தமிழகத்தில் திணிப்பது சாத்தியமற்றது என வைகோ உறுதியாக தெரிவித்தார்.
“தமிழ்நாடு திராவிட இயக்கம் வடித்த மதச்சார்பற்ற நிலம். ஒரு சதவீதம் கூட இந்துத்துவாவை திணிக்க முடியாது. உத்தர பிரதேசம், பீகார் போல் தமிழகம் இல்லை” என வைகோ வலியுறுத்தினார்.