வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பான விவாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டிய நடத்தை குறித்து, லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதத்தில், முதலில் ராகுல் காந்தி பேசினார். பின்னர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து பேசினார். இந்த பேச்சில் அவர் காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்கட்சிகளையும் கடுமையாக குற்றம் சாட்டினார்.
முந்தைய காலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றதாகவும், சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே ஓட்டளித்ததாகவும் அமித்ஷா கூறினார். “வாக்கு திருட்டை முதலில் செய்தது காங்கிரஸ்தான்” என அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, அமித்ஷாவின் பேச்சை குறிவைத்து கூறியதாவது: “நேற்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது கைகள் நடுங்கின. தவறான மொழியை பயன்படுத்தினார். இதை நாடு முழுவதும் பார்த்தது. அவர் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்தது தெளிவாக தெரிந்தது. ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதிக்க நான் சவால் விட்டேன். ஆனால் அதற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை” என ராகுல் குற்றம் சாட்டினார். மேலும் நாடாளுமன்றத்தில் நடந்த இந்த வார்த்தை பரிமாற்றம் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
