கோவை பீளமேடு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கல்லூரி மாணவி ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ், கார்த்திக் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகிய மூவரையும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வெறும் 4 மாதங்களுக்குள், அதாவது 126 நாட்களிலேயே இந்த வழக்கின் விசாரணையை முடித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

​இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ், காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவருக்கும் அவர்களது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டிய ‘வாழ்நாள் சிறை தண்டனை’ விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மிக விரைவாக நீதி கிடைத்துள்ளதைச் சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.