ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய ராணுவம் மற்றும் குடியேறிகளின் தாக்குதலால் பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்படுவது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஐநா வன்மையாகக் கண்டித்துள்ளது. யுனிசெப் அமைப்பின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் இதுவரை குறைந்தது 70 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 850-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
சராசரியாக வாரத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக யுனிசெப் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் வேதனை தெரிவித்துள்ளார்.இந்த உயிரிழப்புகளில் 93% இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டினால் நிகழ்ந்துள்ளன. இது தவிர, குழந்தைகள் மீது மிளகுத் தூள் தெளிப்பது மற்றும் கத்தியால் குத்துவது போன்ற கொடூரமான தாக்குதல்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 1,100 குழந்தைகள் உட்பட 2,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். காசா போர் தொடங்கியதிலிருந்து மேற்குக்கரையில் வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை 1,070-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
