திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான சுரேஷ்குமார் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். திமுக முன்னாள் எம்.பி.யும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான சண்முகத்தின் மகனான இவர், கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் “ஆதிக்க சக்திகளின் அழுத்தம் காரணமாகவே பதவி விலகுவதாக” உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றும் தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு அமைச்சர் எ.வ.வேலுவே காரணம் என்று அவர் பகிரங்கமாகப் புகார் வாசித்துள்ளார். தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் அமைச்சருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி பதவியை ராஜினாமா செய்தது, திருப்பத்தூர் மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
