திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் 9 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்தில், உயிரிழந்த வெளிமாநில தொழிலாளர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளைத் தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், முதற்கட்டமாகச் சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிக்கப்பட்டு 5 பேரின் உடல்கள் ஒடிசாவிலிருந்து வந்த சிறப்பு அதிகாரிகள் குழுவினரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

​இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட 5 தொழிலாளர்களின் உடல்களும் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் ஒடிசாவுக்குக் கொண்டு செல்வதற்கான ஒட்டுமொத்த செலவுகளையும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. மீதமுள்ளவர்களின் உடல்களையும் விரைந்து ஒப்படைக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.