அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள புகழ் பெற்ற கிலாவியா எரிமலை, தற்போது மீண்டும் சீறத் தொடங்கியுள்ளது. சுமார் 4,000 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே தகித்து வந்த நிலையில், இப்போது அதிலிருந்து சுமார் 625 அடி உயரத்திற்கு நெருப்புக் குழம்பு பீறிட்டு வெளியேறி வருகிறது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தத் தீவு எரிமலைகளுக்குப் பெயர் பெற்றது என்பதால், கிலாவியாவில் இருந்து 44-வது முறையாக இப்படி லாவா வெளியேறுவதை அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த எரிமலைச் சீற்றத்தால் வான்நோக்கி எழும்பும் சாம்பல் மற்றும் நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து வருவதால், அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1983-ம் ஆண்டு முதல் அவ்வப்போது லாவாவை வெளியேற்றி வரும் கிலாவியா, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள தீவிரச் சீற்றம் காரணமாகப் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
