ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி முதல் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இருநாடுகளும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறித் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்தச் சூழலில், இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக  பாகிஸ்தானில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான் மற்றும் லெபனான் மீதான இந்த 40 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 17.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்) செலவாகியுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ராணுவ நடவடிக்கைகளுக்காக மட்டும் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது.

மேலும், ஈரானிய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களும் இந்த மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.