மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக கத்தார் நாட்டிற்குச் சென்று அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சரும், ‘கத்தார் எனர்ஜி’ நிறுவனத்தின் தலைவருமான சாத் ஷரிதா அல்-காபியை சந்தித்துப் பேசினார். சமீபகாலமாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளில் எரிசக்தி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்குத் தேவையான இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிசக்தித் தேவைகளை வழங்குவதில் கத்தார் தொடர்ந்து ஒரு நம்பிக்கைக்குரிய நாடாகத் திகழும் என்று கத்தார் அமைச்சர் உறுதி அளித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தித் துறை சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், எதிர்கால முதலீடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கத்தார் உடனான இந்த நீண்டகால நட்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
