அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் துளியும் நம்பிக்கையில்லை என்று பாகிஸ்தான் வந்துள்ள ஈரான் நாட்டுப் பிரதிநிதிகள் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான உயர்மட்டக் குழு, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் வருகை தந்துள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கர்களுடனான பேச்சுவார்த்தைகள் எப்போதும் தோல்வியிலும், வாக்குறுதி மீறல்களிலுமே முடிவடைவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தங்களின் மீது அமெரிக்கா இருமுறை தாக்குதல் நடத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், ஈரானுக்கு நல்லெண்ணம் இருந்தாலும் அமெரிக்காவின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்தார். ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் தரப்புக்கு இடையே கடந்த சில வாரங்களாக நீடித்த மோதலுக்குப் பிறகு, இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.
இதனால் ஹார்மூஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இப்பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்கிறது. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்கப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ள நிலையில், ஈரானின் இந்த வெளிப்படையான அதிருப்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
