அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது ஏழு மாதக் குழந்தையைப் பராமரிக்க அலுவலக நேரத்தில் மாற்றம் கேட்டபோது, அவரது மேலாளர் அளித்த கனிவான பதில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ள அந்த இந்திய இன்ஜினியர், தனது ஏழு மாதக் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் செவிலியர் (Nanny) தினமும் மாலை 4:30 மணிக்குச் சென்றுவிடுவார் என்றும், அதன் பிறகு தனது மனைவி வேலை முடிந்து வரும் இரவு 7:30 மணி வரை தான் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது மேலாளருக்கு அவர் அனுப்பிய செய்தியில், குழந்தையைப் பார்த்துக்கொள்ள மாலை 4:30 முதல் 7:30 மணி வரை நான் அலுவலகப் பணியில் இருக்க முடியாது. இதற்குப் பதிலாக அதிகாலையிலோ அல்லது இரவு நேரத்திலோ கூடுதல் நேரம் உழைத்து இப்பணியை ஈடு செய்கிறேன். இதற்கு அனுமதி தருவீர்கள் என நம்புகிறேன் என்று கோரியிருந்தார்.
பொதுவாக இத்தகைய கோரிக்கைகளுக்குப் பல நிறுவனங்களில் முட்டுக்கட்டை போடப்படும் நிலையில், அந்த அமெரிக்க மேலாளர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் அளித்த பதிலில், இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். உங்கள் குழந்தை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள எனது வாழ்த்துகள். மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் உங்கள் காலண்டரில் இந்த நேரத்தை ‘அலுவலகத்தில் இல்லை’ (Out of Office) எனக் குறித்துவிடுங்கள். அப்போதுதான் மற்றவர்கள் அந்த நேரத்தில் கூட்டங்களை (Meetings) ஏற்பாடு செய்யமாட்டார்கள்,” என மிகுந்த புரிதலுடன் பதிலளித்துள்ளார்.
தனது மேலாளரின் இந்தப் பதிலைப் பகிர்ந்த அந்த இன்ஜினியர், “இந்திய உணவு மற்றும் கலாச்சாரத்தை நான் மிஸ் செய்தாலும், இத்தகைய புரிந்துணர்வு கொண்ட பணிச் சூழல் காரணமாகவே மீண்டும் இந்தியாவில் வேலை செய்யத் தயங்குகிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நல்ல மேலாளர்களைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்தால் ‘நிறுவனக் கொள்கைப்படி வேலை நேரத்தில் 3 மணிநேரம் விடுப்பு தர முடியாது. வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் வர வேண்டும் என்றுதான் பதில் வந்திருக்கும் என மற்றொருவர் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார். நல்ல மேலாளர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள், ஆனால் இத்தகைய சூழல் இங்கு பொதுவானதாக மாற வேண்டும் எனச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைச் சமநிலைப்படுத்தஉதவும் இத்தகைய மேலாளர்களே ஒரு நிறுவனத்தின் உண்மையான சொத்து எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
