உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை  முழுமையாகத் திறப்பதில் ஈரானுக்குத் தொழில்நுட்ப ரீதியான முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தான் வைத்த கண்ணிவெடிகள் எங்கே இருக்கின்றன என்று தெரியாமல் ஈரான் திணறி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் (JD Vance) மற்றும் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்ப்பின் நிபந்தனைக்கு, “தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டே ஜலசந்தி திறக்கப்படும்” என ஈரான் பதிலளித்தது. இந்த ‘தொழில்நுட்ப வரம்பு’ என்பது ஈரானால் அகற்ற முடியாத கண்ணிவெடிகளையே குறிப்பதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியவுடன், உலக நாடுகளை மிரட்ட ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் சிறிய படகுகள் மூலம் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகளைத் தூவியது. ஈரான் இந்தக் கண்ணிவெடிகளை முறையான வரைபடத் திட்டமிடல் இன்றி இஷ்டத்திற்குத் தூவியுள்ளது. பல கண்ணிவெடிகள் கடலின் நீரோட்டத்திற்கு ஏற்ப இடம்பெயர்ந்துவிட்டன. இதனால், அவை தற்போது எங்கே இருக்கின்றன என்பது ஈரானிய ராணுவத்திற்கே தெரியவில்லை. கண்ணிவெடிகள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தாலும், அவற்றைச் செயலிழக்கச் செய்யும் நவீனத் தொழில்நுட்பம் ஈரானிடம் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது. ஈரானின் இந்த நடவடிக்கையால் உலக அளவில் எரிசக்தி விலை விண்ணைத் தொட்டுள்ளது. ஈரான் ஒரு குறுகிய பாதையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, சுங்கம் செலுத்தும் கப்பல்களை மட்டும் அனுமதிக்கிறது. ஆனால், அந்தப் பாதையைச் சுற்றியும் கண்ணிவெடிகள் இருப்பதால் கப்பல் போக்குவரத்து மிக மெதுவாகவே நடைபெறுகிறது.

இந்தக் கண்ணிவெடி விவகாரம் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. “ஜலசந்தியைத் திறக்கிறோம்” என்று ஈரான் உறுதி அளித்தாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்பது பேச்சுவார்த்தையைத் தொங்குபாறை நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. மேலும் ஒருவேளை கண்ணிவெடிகளால் ஏதேனும் ஒரு கப்பல் விபத்துக்குள்ளானால், அது போர் நிறுத்தத்தை முறித்து மீண்டும் ஒரு பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.