ஈரான் மீது தாக்குதல் நடத்தியவர்களை ஒருபோதும் தண்டிக்காமல் விடமாட்டோம் என்று அந்த நாட்டின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த தனது தந்தை அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற தியாகிகளின் மரணத்திற்கு நிச்சயம் பழிவாங்கப்படும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றமிழைத்த ஆக்கிரமிப்பாளர்கள் ஈரானின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றும், போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடும் ரத்தப்பணமும் கோரப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியின் நிர்வாகத்தில் ஈரான் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் போரை விரும்பவில்லை என்றாலும் தனது உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று கூறியுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக சண்டை நிறுத்தம் என்பது போரின் முடிவு அல்ல என்றும், ராணுவப் பிரிவுகள் அனைத்தும் உச்ச தலைவரின் கட்டளைக்கு இணங்க துப்பாக்கிச் சூட்டை நிறுத்தி வைத்துள்ளன என்றும் அவர் விளக்கியுள்ளார்.
