விலங்குகள் மீதான அன்பு சில நேரங்களில் எல்லை மீறினால் எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக, பிரிட்டனில் ஒரே வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட நாய்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். அதாவது பிரிட்டனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இரவு பகலாக நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், விலங்கு நல அமைப்பான RSPCA அதிகாரிகள் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி காண்போரை நிலைகுலையச் செய்தது.

சுமார் 250-க்கும் மேற்பட்ட பூடுல்-கிராஸ் (Poodle-cross) வகை நாய்கள் மிக மோசமான நிலையில் அந்த சிறிய வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய உரிமையாளர், அதன் எண்ணிக்கை பெருகியபோது அதைச் சமாளிக்க முடியாமல் கைவிட்டதே இந்த நிலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்த 250 நாய்களுக்கு மத்தியில், ஸ்டீவி மற்றும் சாண்டி என்ற இரண்டு நாய்களின் கதை காண்போரை நெகிழ வைத்துள்ளது. ஸ்டீவி: பிறவியிலேயே கண் தெரியாத, காது கேட்காத ஒரு நாய். சாண்டி: ஸ்டீவியின் உயிர் நண்பன். வீட்டிற்குள் நிலவிய கடும் நெரிசல் மற்றும் இரைச்சலுக்கு மத்தியிலும், சாண்டி ஒரு வழிகாட்டியாக இருந்து ஸ்டீவியைப் பாதுகாத்து வந்துள்ளது. தற்போது இவை இரண்டும் ஒரு பாதுகாப்பான இல்லத்திற்காகக் காத்திருக்கின்றன. இவை இரண்டும் எப்போதும் சங்கிலியால் கட்டப்பட்டுப் பழக்கமில்லாதவை என்பதால், ஒரு தனியார் தோட்டம் கொண்ட வீடே இவற்றுக்கு ஏற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து RSPCA கண்காணிப்பாளர் ஜோ ஹர்ஸ்ட் கூறுகையில்: “இங்கு பகிரப்பட்ட புகைப்படங்கள் ஏதோ செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை அல்ல; இதுதான் கசப்பான உண்மை. நல்ல எண்ணத்துடன் விலங்குகளை வளர்க்கத் தொடங்குபவர்கள், அதன் எண்ணிக்கை அதிகரிக்கும்போது திகைத்துப் போகிறார்கள். இது இறுதியில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நரகத்தை உண்டாக்கிவிடுகிறது,” என்றார்.

கடந்த ஆண்டில் மட்டும் ஒரே முகவரியில் 10-க்கும் மேற்பட்ட விலங்குகளை வளர்த்த சுமார் 4,000-க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய போக்கு பெரும்பாலும் உரிமையாளர்களின் மனநல பாதிப்புகளுடன் தொடர்புடையது என்றும், விலங்குகள் மீதான அதீத பற்றுதான் அவர்களை இத்தகைய இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது மீட்கப்பட்ட நாய்களில் 87 நாய்கள் RSPCA பராமரிப்பிலும், மீதமுள்ளவை ‘டாக்ஸ் ட்ரஸ்ட்’ (Dogs Trust) அமைப்பிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.