இரவு நேரங்களில் வானத்தைப் பார்க்கும்போது முன்பு தெரிந்த ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இப்போது மங்கலாகவோ அல்லது காணாமலோ போயிருப்பதை நீங்கள் கவனித்ததுண்டா? இந்திய வானில் நட்சத்திரங்கள் மறைந்து வருவது குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். வானத்தில் இருக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத ‘ராட்சசன்’ தான் இந்த நட்சத்திரங்களை விழுங்குவதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

அந்த ராட்சசன் வேறு யாருமல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்ட ‘செயற்கை ஒளி மற்றும் காற்று மாசுபாடு’ தான் என விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். ​நகரங்களில் பெருகிவிட்ட தெருவிளக்குகள் மற்றும் கட்டிடங்களின் அதீத வெளிச்சம், வானத்தின் இயற்கையான இருட்டை மறைத்து நட்சத்திரங்களின் ஒளியை நம் கண்களுக்குத் தெரியாமல் செய்கிறது. குறிப்பாக மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் வானம் எப்போதும் மங்கலாகவே காட்சியளிக்கிறது.

இந்தத் தேவையற்ற ஒளி மாசுபாடு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் நட்சத்திரங்களின் வழிகாட்டுதலுடன் பயணிக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. லடாக் மற்றும் மகாராஷ்டிராவின் சில இருண்ட பகுதிகளில் மட்டுமே இன்னமும் அந்தப் பழைய நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்க முடிகிறது என்பது வேதனையான உண்மை.