மியான்மர் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட 9.90 கோடி ஆண்டுகள் பழமையான ‘எம்பர்’ (மரப்பிசின்) கல்லுக்குள் சிக்கியிருந்த கொசுவின் லார்வா புதைபடிவம், விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பண்டைய கால கொசுக்கள் இன்றைய கொசுக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கும். ஆனால், தற்போது கிடைத்துள்ள இந்த லார்வா, இன்றைய நவீன கால கொசுக்களின் வடிவத்தை அப்படியே ஒத்திருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

​ஜூராசிக் காலத்திலேயே கொசுக்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து பரிணாமம் அடைந்துவிட்டன என்பதையும், கடந்த 10 கோடி ஆண்டுகளாக அவற்றின் லார்வாக்களின் வடிவம் பெரிய அளவில் மாறவில்லை என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. பொதுவாக நீரில் வாழும் லார்வாக்கள் மரப்பிசினுக்குள் சிக்கி புதைபடிவமாவது மிக அரிதான ஒன்று என்பதால், இந்த கண்டுபிடிப்பை ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமாகவும், கொசுக்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ளக் கிடைத்த முக்கிய ஆதாரமாகவும் எல்.எம்.யு (LMU) உயிரியலாளர்கள் கருதுகின்றனர்.