மத்திய மாநில அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவிகள் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. ஏழை எளிய மக்கள் அனைவரும் வங்கி கணக்கை தொடங்குவதற்காக கடந்த 2014-ஆம் ஆண்டு ஜன்தன் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.

இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச கட்டண இருப்பு இல்லாமல் வங்கி கணக்கை பராமரிக்க முடியும். ஜன்தன் திட்டத்தின் கீழ் 56 கோடியே 16 லட்சம் பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.  தற்போது கேஒய்சி என்ற வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும், முகவரியையும் வங்கிகள் சரிபார்க்க பயன்படுத்தும் செயல்முறையை அப்டேட் செய்யவில்லை என்றால் ஜன்தன் வங்கி கணக்குகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு செயல்படாது என சோசியல் மீடியாவில் செய்திகள் உலா வருகிறது.

இதனால் அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களுடன் ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இது குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில் இந்த தகவலில் உண்மை இல்லை. கேஒய்சி விவரங்களை வாடிக்கையாளர்கள் சேர்க்க வேண்டும் என்பது அவசியம் தான். அதே நேரத்தில் கேஒய்சி தகவல் சேர்க்கப்படவில்லை என்றாலும் வங்கி கணக்கு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.