இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் கேமிங் தளமாக விளங்கும் டிரீம் 11, தனது தளத்தில் பணம் செலுத்தி விளையாடும் போட்டிகளை முழுமையாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக உள்ள இந்த நிறுவனம், தற்போது ‘பேன்கோட்’ போன்ற ரியல் மணி சாராத கேமிங் துறைகளில் தனது பார்வையை திருப்ப இருக்கிறது. பயனாளர்கள் மூலம் நேரடி பணம் பெறும் விதமான போட்டிகளைத் தொடர்ந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எதிர்நோக்கும் சூழ்நிலையை முன்வைத்து இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.

இதேநேரத்தில், நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், ஆன்லைன் பெட்டிங் மற்றும் பணம் தொடர்பான கேமிங் சேவைகளை வழங்குவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 கோடி அபராதம் என கடும் தண்டனை விதிக்கப்படும்.

இதனால், டிரீம் 11 போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பான பாதையை தேர்ந்தெடுத்து, பணம் தொடர்பான போட்டிகளை முடிவுக்கு கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளன. இந்தத் தகவல் ஆன்லைன் கேமிங் உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.