உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 69 வயது மாமியாரைக் கொடூரமாகக் கொலை செய்த மருமகள் மற்றும் அவரது காதலனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சினிமாவில் நடப்பது போன்ற விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த கொலையாளிகளைப் போலீஸார் பிடித்துள்ளனர்.
அதாவது லக்னோவைச் சேர்ந்த நிர்மலா தேவி (69) என்ற முதியவர், கடந்த சனிக்கிழமை (மார்ச் 21) தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். மதியம் வீடு திரும்பிய அவரது பேரன், பாட்டியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்களுடனும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
சம்பவத்தின் போது வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை. மருமகள் ரஞ்சனா மட்டுமே இருந்துள்ளார். போலீஸார் வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கேமராக்கள் திட்டமிட்டு அணைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், வீட்டின் கதவுகள் உடைக்கப்படவில்லை என்பதால், தெரிந்தவர்களே இந்த கொலையைச் செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
அப்போது, அதே கட்டிடத்தில் வாடகைக்கு இருக்கும் ராஜன் சர்மா என்பவர் மீது சந்தேகம் திரும்பியது. அவர் சம்பவ நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வெளியேறுவது அருகில் இருந்த கேமராக்களில் பதிவாகியிருந்தது. இந்த வழக்கின் உச்சக்கட்டத் திருப்பமாக, தடய அறிவியல் நிபுணர்களும் மோப்ப நாய் படையினரும் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து நேராக வெளியே வந்து, அங்கேயே நின்றிருந்த ராஜன் சர்மாவின் அருகே சென்று நின்றது.
கொலையாளி ராஜன் மிகவும் தந்திரமாக, போலீஸாருக்கு உதவுவது போல அங்கேயே சுற்றித் திரிந்துள்ளார். ஆனால் மோப்ப நாய் தன்னை அடையாளம் காட்டியதும் பயந்துபோய் அதை விரட்ட முயன்றார். உடனே போலீஸார் அவரைத் தூக்கிச் சென்று விசாரித்ததில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையில், மருமகள் ரஞ்சனாவிற்கும், வாடகைதாரர் ராஜன் சர்மாவிற்கும் இடையே நீண்டகாலமாக முறையற்ற தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை நிர்மலா தேவி பலமுறை கண்டித்துள்ளார். தங்களது காதலுக்குத் தடையாக இருந்த மாமியாரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ரஞ்சனா, ராஜனுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை மதியம் நிர்மலாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தற்போது ரஞ்சனா மற்றும் ராஜன் சர்மா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
