தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘இலவச ஃபிரிட்ஜ்’ (Refrigerators) வழங்கப்படும் என்ற மெகா அறிவிப்பை வெளியிட்டார்.

அத்துடன் 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், கல்விக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உரிமைத்தொகை என அடுக்கடுக்கான கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து ஆளுங்கட்சியையே அதிர வைத்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக தரப்பிலும் ஒரு மாஸ் பிளான் தயாராகி வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, மீண்டும் ‘கலைஞர் டிவி’ பாணியில் அனைத்து வீடுகளுக்கும் உயர்தர எல்இடி (LED TV) டிவிகளை வழங்க திமுக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ள திமுகவின் தேர்தல் அறிக்கையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றன.

ஆகமொத்தம், வரும் தேர்தலில் தமிழக மக்களின் வீட்டு உபயோகப் பொருட்களைத் தீர்மானிக்கும் சக்தியாக இந்த வாக்குறுதிப் போர் மாறியுள்ளது.