சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வாகன நிறுத்துமிடங்களில், இப்போது பொதுமக்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்துடன் இருந்த ஒப்பந்தம் ஜூலை 20 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முடிவடைந்தது குறிப்பிடப்படுகிறது.

மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, முன்னதாக வாகன நிறுத்தக் கட்டண வசூலை முன்னாள் படைவீரர் கழகம் மேற்கொண்டு வந்தது. தற்போது அந்த ஒப்பந்தம் முடிவடைந்ததால், புதிய ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் வரை, வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தும் சூழலில் ஏதேனும் பிரச்சனைகள் உருவானால், பொதுமக்கள் நேரடியாக மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தின் 1913 என்ற எணையில் அழைத்து புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி மக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.