டெல்லியில் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ள காற்று மாசைக் கட்டுப்படுத்த, தரப்படுத்தப்பட்ட மறுமொழி செயல் திட்டத்தின் (GRAP) 4-வது கட்ட கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இன்று (வியாழக்கிழமை) முதல் டெல்லிக்கு வெளியே இருந்து வரும் பிஎஸ்-6 (BS-VI) தரநிலை இல்லாத வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி முடிவால் அண்டை மாநிலங்களான நொய்டா, குருகிராம் மற்றும் காசியாபாத் ஆகியவற்றிலிருந்து தினமும் வரும் சுமார் 12 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்ப அனுமதி மறுக்கப்படும். இதைக் கண்காணிக்க 126 சோதனைச் சாவடிகளில் 580 காவலர்களும், அதிநவீன தானியங்கி கேமராக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) தொடர்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
