நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாஜகவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத நிலையில் தமிழ்நாடு என்ற பெயரை கூட சொல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ‌ திமுக சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இன்று காலை 10 மணியளவில் போராட்டம் தொடங்குகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திமுக கட்சியினர் இன்று போராட்டம் நடத்தும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் ‌ தாம்பரத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது அதில் வரி வாங்க தெரியுது நிதி கொடுக்கத் தெரியாதா என்ற வாசகம் அடங்கியுள்ளது.  அதில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் புகைப்படமும் உள்ளது. மேலும் இந்த பேனர் ஒன்றிய ‌ அரசை கண்டிக்கும் விதத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தமிழக பாஜக கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.