மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்ட அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்துள்ள ஒரு கொடூரமான அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனிஷா என்ற பெண்ணிற்கு சிசேரியன் செய்த மருத்துவர் மோஹித் குப்தா தலைமையிலான குழுவினர், தவறுதலாக அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் துணியை பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே வைத்துத் தைத்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் கடுமையான வயிற்று வலியால் துடித்தபோதும், மருத்துவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் சாதாரண வலி என்று கூறி அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். வலியின் தீவிரம் குறையாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான், ஸ்கேன் பரிசோதனையில் வயிற்றுக்குள் துணி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அந்தப் பெண்ணிற்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றிலிருந்த துணி அகற்றப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்காகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பவ்யா மிட்டல், இது தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்த மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
